Thursday, October 23, 2014

உப்பரிகையின் மேல் நின்ற இருவர் | அனுதின மன்னா | Pandiaraju, Shumadhi



அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:... (மத்தேயு 4:5)

வேதத்தில் இரண்டுப் பேர் உப்பரிகையில் நின்றபோது அவர்களுக்கு ஏற்பட்ட சோதனையைக் குறித்து வாசிக்கிறோம். உப்பரிகை என்பது உயரமான இடமாகும். இரண்டுப் பேருமே வாலிபர்கள். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட சோதனையை எப்படி சந்தித்தார்கள் என்றுப் பார்க்க போகிறோம்.
.
'மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான். ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்' (2சாமுவேல் 11:1-4).
.
தாவீது இராஜா யுத்தத்திற்கு போகும் காலம் வந்தபோது, தான் முன் நின்று நடத்தவேண்டிய யுத்தத்தை, தன் சேனாதிபதி, சேவகர்களை அனுப்பி நடத்தும்படி சொல்லிவிட்டு, இவர் சாயங்காலத்தில் தன்னுடைய அரண்மனையின் உப்பரிகையின் மேல் நேரத்தை செலவழிக்கும்படி உலாத்த ஆரம்பித்தார். அப்படி அவர் உலாத்தும்போது, அவர் கண்களும் உலாவ ஆரம்பித்தது. கண்களின் இச்சையில் விழுந்துப் போனார். பாவம் செய்து, அதற்காக பாவ மன்னிப்பு கேட்டாலும், அதன் விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியதாயிருந்தது.
.
ஆனால் சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து, அதே தாவீதின் குமாரன் என்றழைக்கப்பட்ட இயேசுகிறிஸ்து, தம்முடைய ஊழிய நாட்களின் ஆரம்பமாக நாற்பது நாட்கள் உபவாசம் இருந்து, முடித்தபோது, சாத்தானால் சோதிக்கப்பட்டார். அப்பொழுது ஏற்பட்ட மூன்று சோதனைகளில் ஒன்றில் 'அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்' (மத்தேயு 4: 5-7) என்று வாசிக்கிறோம்.
.
இயேசுகிறிஸ்துவை சோதிக்கும்படி சாத்தான் எருசலேம் தேவாலயத்தின்மேல் நிறுத்தி, குதிக்க சொன்னபோது, அவர் வேதத்தின் வசனங்களை சொல்லி, அவனுக்கு எதிர்த்து நின்று ஜெயம் கொண்டார். சாத்தானின் சோதனையை முறியடித்தார். வெற்றி பெற்றார். மட்டுமல்ல, மற்றொரு சோதனையில் கண்களின் இச்சையாக 'மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான் அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்' (மத்தேயு 4:8-10). இயேசுகிறிஸ்து கண்களின் இச்சையிலிருந்தும் கர்த்தரின் வார்த்தைகளை சொல்லி, சத்துருவை ஜெயித்தார். அல்லேலூயா!
.
தாவீது இராஜா கர்த்தரோடு ஒன்றியிருந்து, அவரை உயர்த்தும் அநேக சங்கீதங்களை இயற்றி இருந்தாலும், சோதனை வந்தபோது, தன்னுடைய இருதயத்தின், கண்களின் இச்சைக்கு இடம் கொடுத்து, அதிலே விழுந்துப் போனார். போருக்கு சென்றிருந்தால் இந்த நிலைமை அவருக்கு ஏற்பட்டிருக்காது.
.
பிரியமானவர்களே, நாமும் கூட இந்த உலகத்தில் இருக்கும்போது, ஆவிக்குரிய யுத்தத்தில் இருக்கிறோம். அதை நாம் மறந்து நம்முடைய சொந்த இச்சைகளுக்கு இடம் கொடுக்கும்போது, நாம் அந்த யுத்தத்தில் தோல்வி அடைந்து, சத்துரு ஜெயம் எடுக்க அனுமதிக்கிறோம். அதினால் ஏற்படும் விளைவுகள் அதிகம். அதிலிருந்து வெளிவர வாஞ்சித்தாலும் அநேகருக்கு வெளிவர முடியாமற் போகிறது. கர்த்தரின் பரிசுத்த இரத்தத்தில் கழுவப்பட்டவர்கள், சேற்றிலே புரளும்படியாக இரட்சிப்பின் வஸ்திரத்தை கறைப்படுத்திக் கொள்ளுகிறார்கள்.
.
ஆனால் கிறிஸ்துவின் வார்த்தைகள், வேதத்தின் வசனங்கள் நம் இருதயத்தில் இருக்கும்போது, சத்துரு கொண்டுவரும் எந்த பிரச்சனைகளையும், சோதனைகளையும் கிறிஸ்து வசனத்தை அறிக்கை செய்து வெளிவந்ததுப் போல நாமும் வெளிவரமுடியும். 'நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்' (சங்கீதம் 119:11) என்று சங்கீதக்காரனைப் போல நாம் கர்த்தருடைய வார்த்தையை நம் இருதயத்தில் வைத்திருந்தால், பாவம் செய்யாதபடி நம்மைக் காத்துக் கொள்ள முடியும். சத்துருவுக்கு எதிர்த்துப் போராடும்படி நாம் வேதத்தை தினமும் வாசித்து அவற்றை நம் இருதயத்தில் பாதுகாத்து, வெற்றியின் ஜீவியம் செய்ய கர்த்தர் தாமே கிருபை புரிவாராக! ஆமென் அல்லேலூயா!


ஜெபம் 
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அதன் மேல் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் என்ற வசனத்தின்படி கர்த்தருடைய வேதத்தில் நாங்கள் இன்னும் அதிகமாக தாகமாயிருந்து, அதை தியானித்து, பாவம் செய்யாதபடிக்கு எங்கள் இருதயங்களில் அவற்றை காத்து, சத்துருவின் மேல் வெற்றி எடுக்க எங்களுக்கு கிருபை செய்யும். கிறிஸ்துவைப் போலவே அவரை பின்பற்றுகிற நாங்களும் சத்துருவின் மேல் வெற்றி எடுக்க கிருபை பாராட்டும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment