Thursday, October 30, 2014

23rd October 2014 - தேவனாலே பெற்ற அபிஷேகம் - பாகம் – 2 | அனுதின மன்னா | Pandiaraju, Shumadhi



நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. - (1யோவான் 2:27).
.
கடந்த 08-ம் தேதி - புதன் கிழமை அன்று நாம் அபிஷேகம் என்பதன் அர்த்தம், யார் அபிஷேகத்தை பெற்று கொள்ள வேண்டும் போன்ற காரியங்களை குறித்து பார்த்தோம். இந்த நாளிலும் தொடர்ந்து காண்போம்.
.
பரிசுத்த ஆவியின் நிறைவை பெற்றவர்களை பெந்தெகொஸ்தேகாரர்கள் என்று அழைக்கிறார்கள். அது ஏன் என்று பார்த்தால், யூதர்களின் பண்டிகைகளில் ஒன்று பெந்தெகொஸ்தே பண்டிகை. பஸ்கா பண்டிகையிலிருந்து ஐம்பதாவது நாளில் வருவது இந்த பெந்தெகொஸ்தே பண்டிகை. அறுப்புகாலத்திற்குப்பின் கர்த்தருக்கு முதற்கனி செலுத்தும் பண்டிகை. ஐம்பதாவது என்பதை குறிக்கும் கிரேக்க வார்த்தையே பெந்தெகொஸ்தே. (லேவி 23:16, அப்போஸ்தலர் 2:1).
.
இந்த பண்டிகை நாளில் எருசலேமில் கூடியிருந்த அப்போஸ்தலரும் சீடரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர். ஆதி நாட்களில் எல்லாருமே இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியை பெற்ற விசுவாசிகளாகத்தான் இருந்தனர். அவர்களுக்கு இயேசுவின் சீஷர்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயர் மட்டுமே இருந்தது, ஆனால் பிந்திய நாட்களில் பரிசுத்த ஆவியை பெற்ற கூட்டம், பெறாத கூட்டம் என்று கிறிஸ்தவர்களுக்குள் பிரிவினை ஏற்பட்டது. பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் தங்கள் அனுபவம் சபையின் ஆரம்ப நாளான பெந்தெகொஸ்தே என்னும் நாளிலிருந்து உண்டானது என கூறினபடியால் இவர்களை பெந்தெகொஸ்தே சபையார் என அழைக்க ஆரம்பித்தனர். ஏழாம் நாள் என்று ஒரு கூட்டம் இருப்பது போல இது ஐம்பதாவது நாள் கூட்டமாகிவிட்டது. தீபாவளியன்று பரிசுத்த ஆவியை பெற்றால் தீபாவளிக்காரர் என்றா அழைக்கிறோம்? பொங்கலன்று அபிஷேகம் பெற்றால் பொங்கல் ஆவியா? எல்லா கிறிஸ்தவர்களும் பெற வேண்டிய பரிசுத்த ஆவியை குறிப்பிட்ட சபை பிரிவிற்குரியது என்று ஒதுக்கினது பெரிய வேதனைக்குரியது.
.
வேதத்தின் அடிப்படை சத்தியங்களை பெரும்பான்மையான சபையார் திட்டமாய் அறிந்திருக்கின்றனர். ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை குறித்த போதனை புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை புறக்கணிக்காமல், போதகர்கள் அதை குறித்து தெளிவாக விளக்கும்போது, கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் அந்த அபிஷேகத்தை பெற்று கொள்ள முடியும்.
.
ஒருவர் இரட்சிக்கப்பட்ட பின்பு பின்மாற்றம் அடைந்து இரட்சிப்பை இழந்து விடும் ஆபத்துக்கள் ஏற்படுவது போல பரிசுத்த ஆவியை பெற்றும் அதை பாதுகாக்க கூடிய பரிசுத்த வாழ்வை, ஜெப வாழ்வை வாழாவிட்டால் அதை இழந்து விடும் ஆபத்துக்கள் உண்டு. ஆவியை அவித்து போடாதிருங்கள் என்று 1 தெசலோனிக்கேயர் 5:19 ல் பவுல் எச்சரிப்பு கொடுத்துள்ளார்.
.
பரிசுத்த ஆவியை பெற்று கொள்வதன் மூலம் ஒருவரும் உடனே பரிசுத்தத்தின் உச்ச கட்டத்தையோ அல்லது பூரண நிலையையோ அடைந்து விடுவதில்லை. பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் நல்ல குணமுள்ளவர்களாக இருக்க வேண்டுமேன்று எதிர்பார்ப்பது சரியே. ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு தங்கள் வாழ்க்கையை முற்றிலும் ஒப்படைக்கும் போதுதான் நல்ல பண்புகளும் நற்சுபாவங்களும் வெளிப்பட ஆரம்பிக்கும். தங்களை எந்த அளவிற்கு ஆவியானவர் ஆள ஒப்பு கொடுக்கிறார்களோ அந்த அளவு ஆவியானவர் பொறுப்பெடுத்து கொள்வார். அவருடைய கிரியைகள் நம் வாழ்வில் செயல்பட ஆரம்பிக்கும்.
.
அபிஷேகம்பெற்ற அநேகர் அந்நிய பாஷையிலே பேசி மகிழ்வதில் கவனம் செலுத்தும் அளவிற்கு ஆழ்ந்த கிறிஸ்தவ அனுபவங்களை பெறுவதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இதை காரணம் காட்டி பரிசுத்தாவியின் அபிஷேகத்தின் முக்கியத்துவத்தை அலட்சியம் பண்ணக்கூடாது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்ற பலருடைய சுபாவங்கள் சரியில்லாமல் இருக்கலாம். அப்படி இருப்பது வேதனைக்குரியது என்றும், அது சரிசெய்யப்பட வேண்டியது என்றும் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் அதை சாக்கிட்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகமே தேவையில்லை என்று கூறுவது முற்றிலும் தவறு.
.
ஆகவே பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை நாம் அலட்சியம் பண்ணாமல், அவருடைய அபிஷேகத்தை பெற்று கொண்டு இந்த உலகிலேயே பரலோக சந்தோஷத்தை அனுபவிக்க தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! நாம் அடுத்த நாளிலும் இந்த கட்டுரையின் தொடர்ச்சியை காண்போம்.


ஜெபம் 

எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நாளுக்காக உமக்கு ஸ்தோத்திரம். இந்த நாளிலும் ஆவியானவரின் அபிஷேகத்தை குறித்து அறிந்து கொள்ள கிருபை செய்கிறீரே உமக்கு ஸ்தோத்திரம். அவரை பெற்று கொள்வதினால் உண்டாகும் நன்மைகளை உணர்ந்து இதை படிக்கிற யாவரும் ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்று கொள்ள உதவி செய்யும். ஆவியானவர் ஒரு குறிப்பிட்ட மக்களுக்குதான் என்ற நிலை மாறி ஒவ்வொரு கிறிஸ்தவரும் அந்த விலையேற பெற்ற அபிஷேகத்தை பெற்று கொள்ள கிருபை செய்யும். அதனால் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், ஜெப வாழ்;கையிலும் நாங்கள் பரிசுத்தத்தில் முன்னேற கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment