Friday, October 17, 2014

நான் பயப்பட மாட்டேன் | அனுதின மன்னா | Pandiaraju, Shumadhi


என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன். - (எரேமியா 46:28).


ஒரு இராஜா தன் பரிவாரங்களுடன் கடலில் பிரயாணம் செய்ய ஆரம்பித்தார். அவரோடு வந்தவர்களில் ஒருவருக்கு கடலில் பயணம் செய்த அனுபவம் கிடையாது. கப்பலில் ஏறினதிலிருந்து 'ஐயோ எனக்கு பயமாக இருக்கிறது' என்று புலம்ப ஆரம்பித்தான். எல்லாரும் வந்து அவனிடம் 'பயப்படாதே, நாங்கள் எல்லாரும் உன்கூடத்தான் இருக்கிறோம்' என்று சொன்னாலும் கேட்கவேயில்லை. அதினால் இராஜா திரும்பவும் கப்பலை திருப்பி, கரைக்கு கொண்டு சேர்த்து அவனை இறக்கி விட வேண்டும் என்று தீர்மானித்த நிலையில், அவரோடு இருந்த அமைச்சர் ஒருவர் 'என்னிடம் விடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று இராஜாவிடம் அனுமதி வாங்கி கொண்டு, அந்த மனிதனை 'கடலில் தூக்கி எறியுங்கள்' என்று கட்டளையிட்டார்.
.
உடனேக் கூட இருந்தவர்கள், அப்பா பிரச்சனை ஒழிந்தது என்று அவனை கடலில் தூக்கி எறிந்தார்கள். அவன் குய்யோ முறையோ என்றுக் கத்திக் கொண்டு கடலில் விழுந்து, அதன் உப்புத்தண்ணீரைக் குடித்து கடலின் மேல் மட்டத்தில் வந்து அதிகமாய் சத்தமிட்டு, உதவி கேட்க ஆரம்பித்தான். அவன் அப்படி மூன்றாம் முறை மேலே வந்த போது, அந்த அமைச்சர் 'அவனை மேலே தூக்குங்கள்' என்றார். அப்படி அவனை மேலே தூக்கி வந்தபோது, அதற்கு மேல் அவன் புலம்பவில்லை, திரும்பி நாட்டுக்கு வரும்வரை அவன் அமைதியாக இருந்தான்.
.
கரைக்கு திரும்பியபோது இராஜா அமைச்சரிடம் 'உனக்கு எப்படித் தெரியும் அவன் மீண்டும் புலம்ப மாட்டான் என்று' கேட்டார். அப்போது அமைச்சர் சொன்னார், 'என்னுடைய திருமண வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் அது. எனக்கு திருமணமான போது, எங்கே என் மனைவி என்னை விட்டு போய் விடுவாளோ என்று காரணமே இல்லாமல், புலம்பி அழுதுக் கொண்டே இருந்தேன். அதைக் கண்ட என் மனைவி உண்மையாகவே என்னை விட்டுப் போய் விட்டாள். நான் திரும்ப அப்படி அழுதுக் கொண்டு இருக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த பின்பே அவள் என்னிடம் திரும்ப வந்தாள். அதைப்போல இந்த மனிதனும் கடலில் இருந்தால் எப்படி இருக்கும் என்று தெரியாமல், அதன் உப்பு நீரைக் குடிக்காமல் சும்மாவே புலம்பிக் கொண்டு இருந்தான். அவனை தூக்கி எறிந்தவுடன் உண்மையான அனுபவத்தை பெற்றுக் கொண்டப்பின் அவனுக்கு புரிந்தது கடலின் அனுபவம் எப்படி இருக்கும் என்று. அதனால்தான் நான் அவனை தூக்கிப் போட்டு திரும்ப எடுக்க சொன்னேன்' என்று சொன்னார்.
.
பிரியமானவர்களே, நாமும் கூட எத்தனையோ காரியங்களில் தேவையற்ற விதத்தில் பயந்து புலம்பிக் கொண்டே இருக்கிறோம். வேதத்தில் தேவன் பயப்படாதே என்று ஒவ்வொரு நாளுக்கு ஒன்றாக 365 முறை எழுதி வைத்திருந்தாலும் நாம் பயப்படுவதை விட்டு விடுவதில்லை. சிலருக்கு அவர்களையும் மீறி தங்களுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் எப்போதும் இருந்துக் கொண்டே இருக்கிறது.
.
நாம் அதிகமாய் பயப்படும்போது, யோபு சொன்னதுப்போல 'நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டதுளூ நான் அஞ்சினது எனக்கு வந்தது' (யோபு 3:25) என நாம் அஞ்சினது நமக்கு நேரிடலாம். ஆனால் கர்த்தர் மேல் நம் பாரத்தை வைத்துவிடும்போது, அவர் நம்முடைய எதிர்காலத்தையும், நிகழ்காலத்தையும் பொறுப்பெடுத்துக் கொள்வார். நாமாக நம் பிரச்சனைகளை தீர்க்க முடியாது. தேவன் மேல் அவற்றை வைத்து ஜெபிக்கும்போது, நிச்சயமாகவே எல்லாவற்றிற்கும் நல்லதான முடிவு உண்டு என்பதை நாம் உணர முடியும்.
.
சிலர் பயத்தின் காரணமாக தாங்களாகவே தங்களுக்கு வியாதியையும், பெலவீனங்களையும் உண்டுப்பண்ணிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு வியாதி என்று ஒன்றுமே இருக்காது. ஆனால் பயத்தினிமித்தம், தங்களுக்கு ஏதோ பெரிய வியாதி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, தங்களையே சோர்வுக்குள்ளும், பெலவீனத்திற்குள்ளும் வைத்து பாதிக்கப்படுகிறார்கள். இது பிசாசின் காரியமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. பயத்தை கொண்டு வருபவனே பிசாசுதான். பிசாசுக்கு எதிர்த்து நிற்கும்போது, அவன் தன்னுடைய பயத்தை தன்னோடு எடுத்துக் கொண்டு ஓடிப்போய் விடுவான்.
.
பயம் இருக்கும்போது அங்கு விசுவாசம் குறைய ஆரம்பிக்கிறது. கர்த்தர் மேலும், அவருடைய கிருபைகளின் மேலும் விசுவாசம் குறைய குறைய பயம் இருதயத்தை முழுவதுமாய் நிறைக்க நிறைக்க, அவிசுவாச வார்த்தைகளும், அவிசுவாசமான செயல்களும் நம் வாழ்வில் வர ஆரம்பிக்கின்றன. அது முழுவதுமாய் நம் வாழ்வை ஆக்கிரமிக்கும்போது, உடல் பெலவீனங்களும், தேவையற்ற காரியங்களும் நம் வாழ்வை தாக்க ஆரம்பிக்கின்றன.
.
பிரியமானவர்களே, பயத்திற்கு ஒருபோதும் இடம் கொடாதிருப்போம். கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்ற விசுவாசம் இருந்தால் பயம் நம்மை அணுகாது. அந்த ஆழமான விசுவாசம் நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியம். என்ன நேர்ந்தாலும் தேவன் எல்லா சூழ்நிலைகளையும் தம்முடைய கரத்தில் வைத்துள்ளதால் என் தேவைகளையும் என் சூழ்நிலைகளையும் அவர் பொறுப்பெடுத்துக் கொள்வார் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை நம் வாழ்வில் இருக்கும்போது, பயம் நம்மை அணுகாது. பயத்தை புறம்பே தள்ளுவோம். கர்த்தர் மேல் விசுவாசம் வைப்போம். கர்த்தர் நம்மை காத்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா! 
 


ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வரும் எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, இந்த புதிய செப்டம்பர் மாதத்தை நாங்கள் காணும்படி எங்களுக்கு தேவரீர் அருளிய கிருபைகளுக்காக உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் எந்த விஷயத்திலும் பயப்படாதபடி எங்கள் நம்பிக்கையை எப்போதும் உம்பேரில் வைத்து உமக்குள்ளே எங்கள் விசுவாசத்தை வர்த்திக்க செய்தருளும். எங்களுக்கு பயத்தை கொண்டு வந்து எங்களை அவிசுவாசத்தில் தள்ளுகிற சத்துருவின் கிரியைகளை இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தால் மேற்கொள்ளுகிறோம். எங்கள் விசுவாசத்தை பெலப்படுத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment