எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட
அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லர்கள் அநேகரில்லை, பிரபுக்கள்
அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்;
பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும்,
இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். - (1கொரிந்தியர்
1:26-28).
.
தாவீது
ராஜாவின் ஆரம்ப நாட்களில், அந்நாளில் இராஜாவாகவும், தாவீதின் மாமனாராகவும் இருந்த சவுல்
அவரை வேட்டையாட வேண்டி அவரை துரத்தும்போது, அவர் தனது உயிருக்கு பயந்து ஒளிந்து கொள்ள
வேண்டியிருந்தது. அப்படி தாவீது வனாந்திரங்களிலே ஒளிந்து கொண்டிருந்தபோது, அவரோடு அநேக
உண்மையான நண்பர்கள் இணைந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அந்த நண்பர்கள் வித்தயாசமானவர்கள்.
அவர்கள் 'ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே
கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர்
அவனோடிருந்தார்கள்' - (1சாமுவேல் 22:2).
.
உலகத்தால்
வெறுக்கப்பட்ட அவர்கள், தாவீதின் கூட சேர்ந்தபோது, அவர்கள் அதிசய விதமாக மாற்றப்பட்டு,
தாவீதினுடைய பராக்கிரமசாலிகளாக மாறினார்கள். தாவீது இராஜாவானபோது, அவர்கள் அவருடைய
பிரதிநிதிகளாகவும், அவருடைய ராஜ்ஜியத்தில் முக்கிய பதவியில் இருப்பவர்களாகவும் மாறினார்கள்.
.
அன்று
தாவீது ராஜாவுடன் இணைந்தவர்களை போல இன்று இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகருடன் நாம் இணைந்திருக்கிறோம்.
கிறிஸ்து பாவிகளை இரட்சிக்க இந்த உலகத்திற்கு வந்தார். மட்டுமல்ல, அவரிடம் வருகிறவர்கள்
இராஜாக்களும், பிரபுக்களும் மாத்திரமல்ல, வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்தவர்கள்,
பாடுகளை அனுபவித்தவர்கள், பிறரால் புறக்கணிக்கப்பட்டவர்கள், பாவிகளும், துரோகிகளும்,
உதவியற்றவர்களும், நம்பிக்கையற்றவர்களுமாயிருக்கிறவர்கள். அவர்களை அவர் தமக்கென்று
தெரிந்து கொண்டு அவர்களுக்கு இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்துவித்து, தமது நீதியின்
சால்வையை தரித்து, தம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பி அவர்களை பராக்கிரமசாலிகளாக
மாற்றுகிறார். பரிசுத்தமாக்கப்பட்ட அவர்களே, அவருடைய ஆயிரவருட அரசாட்சியில் அவரோடு
கூட ஆளுகை செய்ய போகிறவர்கள். அல்லேலூயா!
.
நம்மை
எந்த நிலையிலிருந்து கிறிஸ்து தெரிந்து கொண்டார் என்பதை நாம் அறிவோம். அவர் நம்மை தெரிந்து
கொண்டு அவருடைய நண்பர்களாகவும், அவருடன் இணைந்து அவருடைய இராஜ்ஜியத்தை கட்டுகிறவர்களாகவும்,
தேவன் நம்மை மாற்றியிருக்கிறாரே! நாம் இனி துரத்தப்பட்டவர்கள் இல்லை. நாம் இனி நம்பிக்கையற்றவர்கள்
இல்லை, நாம் இனி அற்பமாய் எண்ணப்பட்டவர்கள் இல்லை, நாம் இனி இழிவானவர்கள் இல்லை, நாம்
இனி புறக்கணிக்கப்பட்வர்கள் இல்லை. மாறாக, கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்கு சொல்லும்
அவருடைய ஸ்தானாதிபதிகளாக இருக்கிறோம். அவருடைய பலத்த பராக்கிரமசாலிகளாக, சாத்தானை எதிர்த்து
போராடுகிறவர்களாக இருக்கிறோம். எத்தனை பெரிய பாக்கியமிது! நம்மை எந்த நிலையிலிருந்து
கிறிஸ்து அழைத்தார் என்பதை நாம் மறவாமல், அவருக்கு நன்றியாக ஜீவிப்போம். அவருக்கே மகிமையுண்டாக
ஜீவிப்போம். ஆமென் அல்லேலூயா!
ஜெபம்
எங்களை
அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, பாவிகளாய் இருந்த எங்களை பரிசுத்தமாக்கினீரே,
தாழ்மையில் இருந்த எங்களை கண்ணோக்கி பார்த்து உயர்த்தினீரே அவை உம்முடைய சுத்த கிருபையல்லவா?
ஒன்றுமில்லாதவர்களும், அற்பமாய் எண்ணப்பட்டவர்களுமாகிய எங்களை நீர் தெரிந்து கொண்டு,
உம்முடைய அன்பின் குமாரனுடைய ராஜ்ஜியத்திற்கு தகுதிபடுத்தினீரே உமக்கு நன்றி. நாங்கள்
ஜீவிக்கும் அளவும், உம்முடைய நாமத்தை மற்றவர்களுக்கு பறைசாற்றுகிறவர்களாக எங்களை மாற்றும்.
இயேசுகிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியில் எங்களையும் அவரோடு கூட ஆளுகை செய்ய கிருபை
செய்ய போகிறீரே அதற்கு பாத்திரவான்களாக எங்களை இப்போதிருந்தே மாற்றுவீராக. எங்கள் ஜெபத்தை
கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்
எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
No comments:
Post a Comment